search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொச்சி ஏர்போர்ட்"

    கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் வெள்ள நீர் சூழ்ந்திருந்த நிலையில், தற்போது 15 நாட்களுக்கு பின்னர் இன்று விமானங்கள் இயக்கப்பட உள்ளன. #KeralaFloods #KochiAirport
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஏற்பட்டுள்ள கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 1924-ம் ஆண்டுக்குப் பிறகு கேரளத்தை தாக்கிய இந்த வெள்ளப்பேரிடரால் சுமார் 370 பேர் தங்கள் உயிரை இழந்தனர். 80,000 பேர் காப்பாற்றப்பட்டனர். 5,645 நிவாரண முகாம்களில் சுமார் 2,23,000 பேர் தங்கவைக்கப்பட்டனர். மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

    மேலும் 200 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. 80,000 கிலோ மீட்டர் அளவுக்கான சாலைகள் பாதிக்கப்பட்டது. இடுக்கி மற்றும் வயநாடு பகுதிகளில் உள்ள சாலைகள் மிகக் கடுமையாக சேதமடைந்தன.

    இடுக்கி, முல்லை பெரியாறு அணைகள் திறக்கப்பட்டதாலும், கனமழையினாலும் தண்ணீர் தேங்கியதால் கொச்சின் விமான நிலையம் 15 நாட்களாக மூடப்பட்டிருந்தது. இதனால் ரூ.220 கோடி அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
    மேலும் கொச்சின் வரும் விமானங்கள் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கோயமுத்தூர் போன்ற வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. விமான ஓடு பாதை, விமான நிலையத்தில் உள்ள கடைகள், டாக்ஸிகள் நிறுத்துமிடம் போன்றவையும் பாதிக்கப்பட்டன.

    இந்த பாதிப்புகளால் மக்களின் அன்றாடம் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், மாநில வருவாயில் 10 சதவீதம் பங்களிக்கும் சுற்றுலா துறையிலும் இவை பாதிப்பை ஏற்படுத்தின. மேலும் சாலை, விமானம் என 2 வகை போக்குவரத்துகள் முடங்கிய நிலையில் வர்த்தகக் கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறுவதிலும் சிக்கல்கள் எழுந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் 20 முதல் வர்த்தக விமானங்கள் மட்டும் செயல்பட துவங்கியது.

    இந்நிலையில் 15 நாட்களாக மூடப்பட்டிருந்த கொச்சி விமான நிலையம், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று திறக்கப்பட உள்ளது. பிற்பகலில் முதல் விமானம் தரையிறங்க உள்ளது. 
    ×